Tuesday, April 6, 2010

கனவில் அரங்கேறிய ஆசைகள்


நெற்றி முகட்டில்
"டி" முட்டி முத்தமிட்டேன்
பசுவிற்கு
பச்சை பட்டென உடுத்த முயன்ற
புல்வெளியில் உருண்டு
வெள்ளி ஓடையில்
தவறி விழுந்தேன்
மான் குட்டி மத்தியில்
கண்ணாமூச்சி ஆடி
மேகங்களில் ஏறி பயணிக்கிறேன்
ம்ம்ம் இப்போது சவப்பெட்டியில்
உயிரோடு உறங்குகிறேன்

Saturday, April 3, 2010

பேருந்து பயணம்


"கொஞ்சம் இவள பிடிங்களேன் .."
என்று சொல்லி முடிப்பதற்குள்
தாவி வந்த குட்டி தேவதையை
மடியில் அமர்த்திக்கொண்டேன்

என் துப்பட்டாவும் , கைப்பேசியும்
அவளை வெகுவாய் ஈர்த்திருக்க கூடும்
கைகளில் பற்ற முயன்றுக்கொண்டே
மழலை மொழியில் ஏதேதோ பேச

அவள் பேச்சுக்கு போட்டியிட வந்த
அருகிலுருந்தவரின் "i-pod "
உமிழ்ந்த இசையெல்லாம்
தோற்றுதான் போனது

திடுமென பின் இருக்கையில்
இருந்த பிஞ்சு விரல் ஒன்று
என் கன்னம் வருட
போட்டியிட்டு தோல்வியுற
தென்றலும் தீண்டி சென்றது என்னை

நிறுத்தம் வந்தும் இறங்க மனமில்லாமல்
நினைவுகளை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு
நான் மட்டும் இறங்கி சென்றேன்...

தயவு காட்டு


சடங்குகள் மட்டுமே
காட்சியாகியிருக்கிறது
நிர்பந்தம் ஏதுமில்லை
அது அவளுக்கான
இருக்கையாகவே இருந்து
விட்டு போகட்டும்
உன் தாரமாக
உரிமையளிக்கும் வரை
தாயாய் இருக்கிறேன்
தயவு காட்டு

சில நேரங்களில்


விட்டு கொடுத்து
வாழ்வது
என் சுபாவம்தான்
வாழ்வையே கொடுத்துவிட்டேன்
வாழச்சொல்கிறாய்
*****************************************
இல்லாதவனுக்குதான்
கொடுக்கும் மனமிருக்குமாம்
என்னிடம் இல்லாத மனதை
உனக்கு கொடுக்க துடிக்கின்றேன்

நீ அதை எப்போதோ
பறித்துக்கொண்டாய்
உணராமல்

******************************************
நீ
அனுப்பிய
புகழ் பெற்ற எழுத்தாளரின்
கவி தொகுப்பும்

பொக்கிஷமாய்
நான் சேமித்து வைத்திருக்கும்
குறுஞ்செய்திகளும்

மட்டுமே மிஞ்சியிருக்கின்றன
நீ இல்லாத தருணங்களில்
உன் நினைவாக
********************************************