Monday, October 12, 2009

தெரியவில்லை

நிதம் உன்னை கனவில் காணுகிறேன்
நிறையத்தான் நானும் பேசுகிறேன்
அட நேரிலே உன்னை கண்டதும்
ஏனோ ஒளிந்துக்கொண்டேன்........
கடை வீதி போகும்போதெல்லாம்
உன்னை போலே யாரும் கடந்து சென்றால்
நின்று பார்க்கிறேன் , அட நீ இல்லை
நான் ஏனோ உடைகின்றேன்
அருகில் நீ இருப்பது அறியாமல்
உன் புகைப்படம் ரசித்தே நான் நின்றேன்
நீ பார்க்கிறாய் நான் வேர்க்கிறேன்
சீ போடா ஏன் பார்த்தாய்..
இது போலே இரட்டை வேடமிட்டு
நடிக்கின்றேன் ஏனோ தெரியவில்லை
அட இன்னுமே இதிலிருந்து தெளியவில்லை .......

ஆனந்தம்

தபால் காரர் குரல்
கேட்டு நறுக்கிய காய்களை அடுக்களையில் விட்டு
விட்டு வாசல்
ஓடினேன் நம்ப முடியவில்லை
என்னால் முதல் முறையாய்
நான் எழுதி அனுப்பிய கவிதையை
மாதப்பத்திரிக்கை வெளியிடிருந்தது
அந்த நொடியில்
ஆனந்தம் வேறில்லை என்றபடி நின்றேன்
அதை பொய்யாக்கியது
உள்ளே விளையாடிகொண்டிருந்த என்
பிஞ்சு முதல் முறையாய்
"அம்மா" என்று என்னை அழைத்து .......

Friday, October 9, 2009

திருமண புகைப்படம்


சரிந்துவிட்டது பூ மாலை

நீ என் தோள் சாய்ந்ததும் நிகராக

நிற்க இயலாமல் ...

Tuesday, October 6, 2009

குழந்தை ...

கவலை
கொள்கிறேன் கர்பத்தில் யேந்த இயலாததை எண்ணி ,
களிப்பும் கொள்கிறேன்
கனவில் உன் முகம் காண்பதை எண்ணி ....

Thursday, September 24, 2009

வரம்

தோள்களில் சாய்ந்தழும் வரம் கேட்டேன்

அழுகை மட்டும் தந்து சென்றாய்

அழுகை அழுகையாய் வருகிறதே

தோள்கள் இல்லையே சாய்ந்து கொள்ள

விதியும் வலியது உணர்ந்து

கொண்டேன் உன்னை பிரித்து சென்றதே வலி உணர்ந்தேன்

தனிமை இனிமை என்று சொன்னேன்

தனித்தே விட்டாய் தவிக்கின்றேன்
தேடி தேடி வந்து காதலித்தாய்

கைகள் பிடித்தும் ஏன் உதரிவிட்டாய்

கை விடும் உரிமையும் உனக்கு மட்டும்

கை பிடித்தவன் நீதானே

சலித்துவிட்டது காதலிதான்

காதல் புதிதாய் நீ தேடிகொண்டாய்

இதயத்தில் உன்னை செதுக்கி வைத்தேன்

என் இதயம் உடைந்தால் தான் நீ மறைவாய்

உளறல்

தெளிவாய்தான் சொல்கிறேன் அன்பே ,

உளறல் என்கிறார்கள்

அடிக்கடி உன் பெயர் சொல்வதை ...

Thursday, September 17, 2009

எனை சேராமல்

உன்னை நினைத்த அந்த ஒரு நொடி பொழுதில்
எனை விட வேகமாய் உன்னை காண ஓடி வரும்
என் கண்ணீர் துளி
நீ இல்லாததால் ஏமாற்றம் அடைந்து
மீண்டும் என் கண்களுக்குள் செல்ல இயலாமல்
வெளியேறுவதை போல்
உன்னை தொடர்ந்த என் மனதும் நீ
ஏற்காதபோதும் மீண்டும் எனை சேராமல் உன்னையே
பின் தொடர்கிறது

நன்றி

கண்ணீர் பரிசளித்த காதலனுக்காக கோவிலில் விரதமிருக்கும் பேதை நான் அவன் நல் வாழ்வுக்காக உள்ளத்தை களங்கப்படுத்தியவன் உடலை மட்டுமாவது கற்போடு விட்டு வைத்த நன்றிக்காக

நன்றி

கண்ணீர் பரிசளித்த காதலனுக்காக கோவிலில் விரதமிருக்கும் பேதை நான் அவன் நல் வாழ்வுக்காக உள்ளத்தை களங்கப்படுத்தியவன் உடலை மட்டுமாவது கற்போடு விட்டு வைத்த நன்றிக்காக

நாம்

நாண் ஏற்ற நொடி முதல் நான்மறைந்து நாமானோம்

மணம்

விதியென நான்விபத்தென நீமணந்து கொண்டோமே முள் நிறைந்த பாதை என்றுபயணம் தொடங்கினோம்கை கோர்த்து நடந்த பின்னேமலர்கள் நிறைத்தோம்நம் பாதையில்

முதிர் கன்னி

கனியாக பிறந்திருந்தால் அணில் கடித்தாலும் விலைபோகும்கன்னியாகிபோனதால்விலை போக வில்லை

காதலன்

நீந்தி கரை ஏறுபவனுக்காக இல்லைஎன் காதலில் கரைபவனுக்காக காத்திருக்கிறேன்

ஆழம்

ஆழம் அறியாமல் காலை விடாதே என் காதலுக்குள் மூழ்கிடுவாய்மீள முடியாதே

குருடர்கள்

விபத்தில் சிக்கிய வாலிபன்
பேருந்தில் கர்பவதி
யாசிக்கும் சிறுவன்
மரணப்படுக்கையில் முதியவர்
இவர்களை
காணும்போது மட்டும்
கண் கொண்டும் குருடர்களாய்
நாம்...

குற்ற உணர்ச்சி

பசியில் அழுத என் பிள்ளைமார்பு முட்டி பாலுண்ணும் இசையை ரசிக்க இயலாமல் கொல்லையில்பசுவின் அழுகுரல்கன்றை கட்டிபோட்டு விட்டு பால் கரந்தான் கந்தசாமிகுற்ற உணர்ச்சி தாளாமல் கட்டவிழ்தேன்துள்ளி சென்ற கன்று பசியாறியதுகுழந்தையின் அழுகுரலும் மாறியதுஅவள் அழுதது கன்றுக்கா என்னுள் ஆச்சரியம்

அச்சம்

மழை துளிகள் ஒரே சீரான இடைவெளியில்விட்டு விட்டுதரை தொட்டு தாளம் போட்டுகொண்டிருந்தனவெள்ளம் வடிந்துவிட்டதுவந்து சென்ற அடையாளங்களை மட்டும்விட்டு விட்டு அடைக்கலம் தந்த என் மண் குடிசையில் நீரூற்றுசாக்குப்பைகளை மெத்தையாக்கி மாற்று சேலையை போர்வையாக்கிஎன் மகனைஉறங்க வைத்தேன் மீண்டும் இடிமுழக்கம் இம்முறை வான வேடிக்கைகள்விடிந்தால் தீபாவளியாம்மண் குடிசையும் சாம்பலாகி விடக்கூடாதென்பது மட்டும் என் அச்சம்

பாதச்சுவடுகள்

என் இதயத்தில் உன் பாதச்சுவடுகள் மட்டுமே அழிப்பதற்கு அலைகள் இல்லைஅழுது பார்க்கிறேன்கண்ணீர் அழித்துவிடும் என்றுஅதில் ரோஷமிருக்கிறது அல்லவா

ஒற்றையடி பாதை

பரந்து விரிந்திருந்த பச்சை சேலைவளைந்து நெளிந்திருந்த கிழிசல்பூமித்தாய் மேனியை காட்டியதுமரண ஓலம் கேட்க நேரமில்லாத மானுடம் நடந்து சென்றது புற்களின் கல்லறை மீது-----ஒற்றையடி பாதை

பயணம்

உன்னுடனான என் பயணங்கள் உற்சாகமானவைதான்இருந்தும் உதறுகிறேன் என் கை கோர்க்கும் உன் விரல்களைஉடன் எவரையும் அழைத்து வரக்கூடாத பயணமிதுவிட்டுச் செல்லவும் மனமில்லைகூட்டிச் செல்லவும் மனமில்லைமகனேஎவ்வாறு புரிய வைப்பேன் எனது பயணம் கல்லறையை நோக்கி என்று

மயக்கியது

மங்கையரின் மனம் மயக்கியது மல்லிகைதான் தாமரையின் வரிகளை கேட்கும் வரை

திரு நங்கை

உள்ளதைச் சொல்லவா உணர்வதை சொல்லவாபுகை பிடிக்கவா அடுப்பூதவாஏர் உழவாநாத்து நடவாபடிக்கட்டில் தொங்கவாஇருக்கையில் அமரவாநான் ஒரு திருநங்கை

நிலைமை

விட்டுவிட விட நினைத்தாலும் இருகப்பிடிகிறது உன் நினைவுகள்தொட்டு விடும் தூரத்திலிருந்தாலும்நான் வெறும் முன்னாள் உரிமையாளனேவிற்றுவிட்டேன் நான் ரசித்து உறவாக்கிய ஓவியத்தை இதுதான் என் தந்தையின் நிலையாக இருக்குமோஎன் திருமணத்திற்கு பிறகுஒரே ஒரு வித்யாசம்என் ஓவியத்திற்கு பணம் பெற்றது நான்என் திருமணத்திற்கு பணம் கொடுக்கபோவது என் தந்தை

பிரிவு

கன்னங்களில் கண்ணீர் வந்துஎட்டி பார்த்து ஏமாற்றமடைந்தது துடைத்துவிட உன் விரல்கள் இல்லாமல் ஆடை அசைத்த தென்றலும்பானை உருட்டிய பூனையும் உனையே நினைவூட்டினவெறிச்சோடி இருப்பது வீடு மட்டுமல்லஎன் உள்ளமும்தான் எப்போது வருவாய் மகனேஎன் தாய் வீட்டிலிருந்து

எதிர்காலம்

விளை நிலங்களில் மாளிகைகள் விளைந்திருக்கவிவசாயிகளும் நெசவாளிகளும் கடனில் மூழ்கியிருக்க மின்சாரம் இல்லாமல் நகரமும் இருண்டிருக்கஏரிகள் எல்லாம் குடிசைகள் ஆகி நிற்க வெள்ளம் வடியும் பாதைகள் மூடி இருக்கபள்ளி , கல்லூரிகள் வியாபாரம் ஆகி விடஅடுத்த தலைமுறையினருக்கு எதை கொடுக்கப்போகிறோம் என்று நான் குழம்பி நிற்கிறேன்

ஏக்கம்

அலுவலகம் செல்லும் அண்டை வீட்டுப் பெண்ணின் குழந்தை "அம்மா" என்று என்னை அழைத்ததுநான் கன்னி என்பதை மறந்து என் மார்பு பால் சுரந்தது

காத்திருப்பேன்

எவரும் அறியாமல் எனக்குள் வளர்த்த செடி மலர்ந்தும் மறைக்கிறேன் மணம் உன் மனம் சேரும் வரை காத்திருப்பேன்

தோழிகள்

என்னிடமே சொல்லியிருக்கலாம்"உன்னை ஏணியாக்கிஏறி கொண்டிருக்கிறோம் "என்றுஉங்களை "துரோகிகள்" என்னும் உலகிற்கு உரக்க கூறுவேன்நீங்கள் என் "தோழிகள்" என்று...

காத்திருக்கிறேன்

பிடித்த மொழியில் பேச காத்திருக்கிறேன்உனக்காகஎன் மௌனத்தை புரிந்துகொள்வதுநீ மட்டுமே!!

அதிகாலை சாரல்

அதிகாலை சாரல் ஒரு துளியாய் என் இதழில்துடைக்கும் கரங்களைதடுத்தது பூங்காற்று இயற்கை இட்ட முத்தத்தின்ஈரத்தை அழிக்காதே என்பது போல்இலைகளின் சரசரப்பு

எனக்கே தெரியாமல் என்னைதிருடினாய்தெரிந்ததும் , கள்வனின் புத்தியை காட்டிவிட்டாய்"நான் எடுக்கவில்லை"திருடிய உன்னிடத்திலும் இல்லாமல்திருடப்பட்ட இடத்திலும்

இல்லாமல் திரி சங்கு சொர்கத்தில்நான்!!

வீணாக்கப்பட்ட

ஏழை பசித்தீ அணைக்க என் கண்ணீர் போதுமா பந்தியில் வீணாக்கப்பட்ட உணவு , நான்....

வாயாடி

வாயாடி என்னும் பட்டம் பெற்று வார்த்தைகளை செலவு செய்து கொண்டிருக்கிறேன்யாருக்கும் தெரியாது என் மௌனங்களை உனக்காக நான் சேகரிப்பது

ஐந்தறிவு

யாதாயிருப்பினும் அஃது உணரும்நாய் குரைத்த மொழி நீ அறிவாயா?யாவர்க்கு ஐந்தறிவு ?

எய்தா அம்பாய்

நின்னை நோக்கி எழும் சிந்தனை எய்தா அம்பாய் ரணமாக்கியது அது அடைபட்டிருக்கும்என் இதயக் கூட்டை

Friday, May 22, 2009

ஆயர்பாடி மாளிகையில்

எழுதியவர் -கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.வி
பாடியவர்-எஸ்.பி.பி

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல் மாய கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய் நிறைய மண்ணை தின்று மண்டலத்தை காடியப்பின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
நாக பதம் மீதினில் அவன் நர்தனங்கள் ஆடையிலே தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோகா நிலை போலிருக்கும் யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன் அழகை காண்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ